Thunai Ezhuthu – A Review

துணையெழுத்து [Thunai Ezhuthu] by S. Ramakrishnan
My rating: 4 of 5 stars

மதுரையை ஒட்டி உள்ள சமணர் படுக்கைகளைச் சென்று பார்த்த அனுபவங்களை திரு.ராமகிருஷ்ணன் ஒரு சிறுகதையில் பகிர்ந்துகொண்டார். நான் எட்டு வருடமாக வசித்த ஊரைப்பற்றி எனக்குத் தெரியாத விவரங்களை படித்தபோது எனக்கு வெட்கமாக இல்லை. இப்படியாவது தெரிந்துகொண்டோமே என்றுதான் தோன்றியது.

சமணர் படுக்கைகளைக் காண எனக்கு ஆசை இல்லை. என்னால் கண்டிப்பாக போக முடியாது என்று தெரிந்ததால் நான் ஆசைப்படவேயில்லை. கனவு காண்பதில் கூட முட்டுக்கட்டை போடவேண்டிய அவசியம். வீடு, வேலை, தோழர்கள், தாய், தந்தை, நாய்க்குட்டி, ஆகிய எல்லாவற்றையும் மறந்துவிட்டு, நாம் யார் என்று அடையாளம் கண்டுகொள்ளாத ஊரில் பரதேசி போல் திரிய வேண்டும் என்கிற ஆசை யாருக்கு இல்லை? அதைச் செய்வது சுலபமா? போகாமல் இருப்பதற்கு பத்தாயிரம் காரணங்களும், அறியாத உலகம் விரோதத்துடான் நம்மை விரட்டிவிடுமோ என்ற பயமும் இருக்கும்.

அதனாலேயே ராமகிருஷ்ணன் பணமே இல்லாமல் வேறு ஊருக்குக் கிளம்பும்போதும் புது மனிதர்களிடம் தயங்காமல் பேசும் போதும் ஒரு மாவீரனைப்போலவே எனக்குத் தோன்றினார். அது, மனிதர்கள் இயல்பில் நல்லவர்கள் என்ற நம்பிக்கை உடையவர்களுக்கு வரும் துணிவு. தொலைந்து போன குழந்தைக்கு பலூன் வாங்கிக்கொடுத்து சமாதானம் சொல்லுபவர்களும், மருத்துவ உதவி கேட்கும் விளம்பரங்களைப் படித்து நூறு ரூபாய் அனுப்புவோரும் இன்னும் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆச்சரியமாக இருந்தது. அவரது சிறுகதைகள் கொடும் வெயிலையும், மின்சார ரயிலில் ஊசி விற்பவர்களையும் அழகாகக் காட்டியது.

அவர் சந்தித்த மனிதர்கள் சொன்னதாகக் கூறிய பல கருத்துகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் ஒன்று, திரு. ராமகிருஷ்ணனின் புத்தகத்தைப் படித்து அவரது காலை வெட்டிவிடுவேன் என்று மிரட்டல் கடிதம் எழுதிய சைக்கிள் கடை வைத்திருந்த மூர்த்தியுடையது:

“புத்தகம் மட்டுமில்லேன்ன என்ன ஆகியிருப்பேன்னே சொல்லமுடியாது. வாழ்க்கையில நிச்சயமா எனக்கு பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி எங்கேயும் போக முடியாது. ஏன் இங்கேருக்கிற கல்கத்தாவுக்குக்கூடப் போக முடியாது. ஆனால் இதெல்லாம் பழகின ஊர் மாதிரி ஒரு சிநேகிதமிருக்கிறது. காரணம், புத்தகம்தான் இல்லயா?”

Buy the book | View all my reviews

Leave a Reply

%d bloggers like this: